.

கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பு இலவசம், வேலை உறுதி

இலவசப் பொறியியல் படிப்பு, படித்து முடித்ததும் உத்தரவாத வேலை எந்தப் படிப்பில் கிடைக்கும்? அதுவும் கடற்படையில் அதிகாரி பணி என்றால் சும்மாவா. இந்த வாய்ப்புகளை வழங்குகிறது மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் இயங்கிவரும் கடற்படை பொறியியல் கல்லூரி.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது இந்தக் கல்வி நிறுவனம். இங்குப் பி.டெக். எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகள் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்ற படிப்புகள். ஒவ்வொரு பிரிவிலும் தலா 90 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
4 ஆண்டு காலம் கொண்ட இந்தப் படிப்பு முற்றிலும் இலவசம். படிப்புக்கான அத்தனை செலவையும் இந்தியக் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது.
தகுதிகள்
பிளஸ் 2வில் அறிவியல், கணிதப் பாடங்களைப் படித்திருக்கும் மாணவர்கள் இதில் சேரலாம்.
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 55 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். வயது 16.5 முதல் 19க்குள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலும் பார்வையும் முக்கியம்.
அட்மிஷனைப் பொறுத்தவரையில், முதலில் அறிவுத்திறனைச் சோதித்தறியும் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்குச் சர்வீஸ் செலக்ஷன் போர்டு எனப்படும் பணித் தேர்வு வாரியம் உளவியல் தேர்வு, தனிநபர் தேர்வு, குழுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றை நடத்தும்.
இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோர் முதல் 6 மாதங்கள் கடற்படை குறித்த அடிப்படை பயிற்சிக்காகக் கோவாவில் உள்ள கடற்படை அகாடெமிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிறகு பூனேயில் உள்ளக் கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பைத் தொடருவார்கள்.
நேரடிப் பணி
நான்கு ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக். பட்டம் வழங்கும். அதன் பிறகு அவர்கள் இந்தியக் கடற்படையில் நேரடியாக அதிகாரி பணியில் நியமிக்கப்படுவார்கள். தகுதியும் திறமையும் இருந்தால் கடற்படை துணைத் தலைமை தளபதி (வைஸ்-அட்மிரல்) வரை பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.

கடற்படை பொறியியல் கல்லூரியில் சேருவது தொடர்பான அறிவிப்பு மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்படுகிறது. கடற்படை வேலைவாய்ப்புத் தகவல்களை வெளியிட்டு வரும் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்திலும் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.


Thanks : thehindu.com

0 comments :