.

நாடார் இந்து உயர்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா.


                                                                                      முப்பெரும் விழா நாள் : 07.09.2014 



   முப்பெரும் விழாவில் முதலாவதாக பவள விழா. 1939 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய 
ஆறுமுக நயினார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நமது பள்ளி 2014 ஆம் ஆண்டில் 75 
வருடங்களை நிறைவு செய்து பவள விழாவிற்கு அடியெடுத்து வைத்தது. அடுத்தபடியாக புதிய கட்டிட திறப்பு விழா. நமது மதிப்பிற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியர் நினைவில் 
வாழும் புஷ்ப லதா அவர்களின் நினைவு கட்டிடமும், 6 புதிய வகுப்பறை திறப்பு விழாவும். 
முப்பெரும் விழாவின் மூன்றாவதாக விளையாட்டு விழா. இந்நாள் மற்றும் 
முன்னாள் மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள். 

    பள்ளியின் புதிய மற்றும் கல்வியைப் பற்றி நன்கு அறிந்த நிர்வாகத்தின் பெரிய 
முயற்சியாக நமது பள்ளியின் முப்பெரும் விழா. இந்த பெரிய முயற்சியின் முதல் படியாக 
நமது பள்ளியின் அறிவிப்பு பதாகை. 


     ஆரம்பத்தில் அந்த அளவுக்கு வீரியமாக  தெரியாத முப்பெரும் விழா, நமது பள்ளியின் எதிரில் முதல் நினைவு பதாகையை கண்டவுடன் மின்னல் வேகத்தில் பரவியது. அடுத்தடுத்த நாட்கள் நெருங்க நெருங்க ஒவ்வொன்றாக அதிகரித்த  நமது பள்ளியின் புகைப்பட நினைவு பதாகைகள், நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் வரை புதிது புதிதாக, கீழப்பாவூரின் சென்ட்ரல் வங்கியில் இருந்து அம்மன் கோவில் மைதானம் வரை.  அப்பாவும், மகனும் போட்டி போட்டுக்கொண்டு பதாகைகள் வைத்த ரசிக்கும் படியான விழாவாக மாறியது நமது பள்ளியின் முப்பெரும் விழா. கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட நினைவு பதாகைகளினால் கீழப்பாவூர், பல குடும்பங்களையும், பல சாதிகளையும் மீறி மாணவர்களின் ஊரானது. 

    இது ஒரு பக்கம் என்றால் உள்ளூர் தொலைக்காட்சிகளில் " மீண்டும்  பள்ளிக்கு போகலாம். நம்மை நாம் அங்கே தேடலாம்" என்று மனதை உருக்கி இன்னும் வேகம் கூட்டினார்கள். 

   இதையெல்லாம் தாண்டி முகநூலில் அமர்க்களம் கண்டது நமது பள்ளியின் முப்பெரும் விழா. 
எந்தப் பக்கத்தை எடுத்தாலும் நமது பள்ளி சம்மந்தமான பதிவுகள். நமக்கு கல்வி கொடுத்த 
நமது ஆசிரியர்களைப் பற்றிய உருக்கமான பதிவுகள். பள்ளியின் விழாவிற்கான தனிப்பட்ட சின்னங்கள். மலரும் நினைவுகள்  என்று கூறி ஒரு நாளில் பாதிக்கு மேலான நேரம் எடுத்து பல 
பேரிடம் தகவல்களை கேட்டறிந்து, அதை ஒட்டு மொத்த ஊருக்கே பகிர்ந்து அனைவரையும் அரைக்கால்  சட்டை போட்ட மாணவனாக மாற்றிய  சிலரது எழுத்துக்கள். மேலும் முன்னாள் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் தேடியெடுத்து, அதற்காக நேரமெடுத்து முகநூலில் பதிவு செய்ய வைத்தது நமது பள்ளியின் முப்பெரும் விழா. இவ்வாறு களத்திலும், தொலைக்காட்சியிலும், இனையத்திலும் நமது பள்ளியின் விழா நிஜத்தில் எப்படி இருக்கும்? ஆர்வத்தில் பலர் வந்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்தார்கள். பள்ளியில் விடுமுறை எடுத்தவர்கள், பள்ளிக்காக விடுமுறை எடுத்தார்கள். நமது பள்ளியும் நம்மைப் போன்றே தயாரானது, முப்பெரும் விழாவிற்கு, முந்தைய நாள் வரை. 


       கடைசியில் கம்பீரமாய், வண்ண விளக்குகளுடன் தயாரானது நமது பள்ளி. (07.09.2014) நமது விழா நாளும் வந்தது. விளையாட்டு விழாவில் ஆரம்பித்தது நமது பள்ளியின் முப்பெரும் விழா. அதிகாலை மழையினால் தேங்கிக் கிடந்த தண்ணீரை, ஒரு நொடி கூட யோசிக்காமல் வெளியேற்றி, மணலை நிரப்பி மைதானத்தை விளையாட்டுப் போட்டிக்கு தயாராக்கினர்  மைதானத்தில் இருந்து அழுக்கு தண்ணீரை வெளியேற்றி, கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார்கள் இந்நாள் மாணவர்கள். மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் மூலம் நமது சுற்றுவட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்த நமது பள்ளியின் மாணவ - மாணவிகள். 

    இது ஒரு பக்கம் இருக்க அதே நேரத்தில் முன்னாள் மாணவர்களின் மூலம் திறந்து வைக்கப்பட்ட வகுப்பறைகள் மேலும் சிறப்பு. ஒவ்வொரு வகுப்பறையிலும் புகைப்படம் 
எடுக்கும் சப்தம். அனைத்து ஆசிரியர்களுடன் புகைப்படம். நாம் படித்த வகுப்பறையின் 
இடத்தை பார்க்கும் போது பழைய நினைவுகளின் வெளிப்பாடாக வார்த்தைகளில் தடுமாற்றம். 
இவற்றிற்கு இடையே பள்ளியின் சார்பாக மதிய விருந்து. இவை அனைத்தும் கனவா? 
அல்லது நினைவா? என்று யோசிக்கும் முன்னரே பவள விழா நிகழ்ச்சிகள் 
ஆரம்பமானது.

   ஒட்டுமொத்த ஊர்த் திருவிழா போல கூட்டம் கூட்டமாய் நமது பள்ளியின் மாணவ - மாணவிகள். குடும்பம் குடும்பமாய். மறக்க முடியாத தருணங்களை அறங்கேற்ற. 
இருக்கைகள் இல்லையென்றாலும் அசராமல், மணிக்கணக்காய் நின்று கொண்டு நிகழ்ச்சியை பார்த்த நெகிழ்வான நிகழ்வுகள். மேடையில் இருந்த நம்மூர் பெரியோர்கள் அனைவரும், அவர்களின் அரைக்கால் சட்டை அனுபவங்களை கூறி நம்மையும் பள்ளி மாணவனாகவே மாற்றி விட்டார்கள்.  
 
      
         பள்ளியின் பெயரில் மட்டும் தான் சாதி உள்ளது, எங்கள் மனதில் இல்லை என்று நிரூபணம் செய்த பேச்சுகள். 

   இதற்கு இடையில் தனித்திரையில் காட்சிகளுக்கான ஏற்பாடு செய்து, இடையிடையே ஆனந்தக்கண்ணீரை வரவைக்கும் உணர்வுபூர்வமான பாடல்கள். மேடையில் இருந்தவர்களின் பள்ளி சம்பந்தமான பேச்சுகள், பள்ளியின் நினைவுகள், பள்ளியின் சாதனைகளை சொன்ன விதம் அனைத்தும் அருமை. சாதனை மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் நினைவுப் பரிசுகள், ஒரே குழுவான சேலைகள், குழு புகைப்படம் இவை அனைத்தும் ஆனந்தத்தின் எல்லைக்கே கூட்டிச் சென்றது. 




     மாணவ - மாணவிகளின் மேடைப்பேச்சு, நடனம், நாடகம் அனைத்தும் அருமை. அதுவும் 
காலை 6 மணிக்கே மைதானத்திற்கு வந்து மாரத்தான் ஓடி, விளையாட்டில் பங்கெடுத்து, இரவு 2 மணி வரை தூங்காமல் விழாவின் வெற்றியில் பங்கெடுத்து, நெஞ்சில் இடம் 
பிடித்து விட்டார்கள். 


    மேலும் முன்னாள் மாணவர் சங்கம் மூலமாக இந்த முப்பெரும் விழாவினை புதியதோர் வரலாற்றிற்கு அடித்தளமாக மாற்றிச் சென்று விட்டார்கள். இவை அனைத்திற்கும் மேலாக " பசுமை நிறைந்த நினைவுகளில், பாடித் திரிந்த பறவைகளே " எனப்பாடி அனைவரையும் புல்லரிக்க வைத்ததே விழாவின் உச்சம். நமது பள்ளியின் முப்பெரும் விழா முடிந்து போன விழா அல்ல.

   தோழர்- தோழியர்கள்- ஆசிரியர்களை இனைத்து வைத்த புதிய உறவுகளின் தொடக்க விழா. விழாவிற்கு வந்த அனைவருக்கும், இதற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், உழைப்பை மட்டுமே காட்டிக் கொண்டு கடைசி வரை முகம் காட்டிக் கொள்ள விரும்பாத எங்கள் ஆசிரிய ஆசிரியைகளுக்கும். 

    விழாவினை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் மாணவர்களில் ஒருவனாக நன்றி.....! நன்றி.......!நன்றி.......!


### முன்னாள் மாணவர் சங்கம்

1 comment :

  1. Ennanl Vilavil Kalanthu Mudiavillai... Varuthamaga ullathu... Ennai Software engineer aga Uruvakkia En School ku Nantri.........

    ReplyDelete