பொறியியல் கலந்தாய்வுக்கு முன்னதாகவே கல்லூரிகளைத் தேர்வு செய்யுங்கள்
பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களில் மட்டும் சுமார் 6,490 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளதையே இதைக் காட்டுவதாகக் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளிவந்தாலும், பொறியியல் படிப்பின் மீதான மோகம் கொஞ்சம்கூட குறையவில்லை.
இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பத்தை வாங்கி வைத்திருக்கும் மாணவரா நீங்கள்? உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் சேர வேண்டிய பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.
கலந்தாய்வுக்கு காத்திருக்கும் மாணவர்களாக இருந்தால், எந்தப் படிப்பில் சேர வேண்டும், எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற முடிவை பெற்றோரும், மாணவரும் இணைந்து மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
இந்தக் கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம்பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் நல்லா நிலையில் உள்ளனர். எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதும் தவறு.
அறிந்தவரிடம் மட்டுமே ஆலோசனை: ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனையைப் பெறலாம். இன்டர்நெட்டிலும் ஏராளமான தகவல்கள் உள்ளன.
இதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கலாம். மாணவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்களிடம் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
525 பொறியியல் கல்லூரிகள்: மொத்தம் 525 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.6 லட்சம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பல புதிய பொறியியல் கல்லூரிகளும், படிப்புகளும் தொடங்கப்படுகின்றன. எனவே, இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
கல்லூரியை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்? கடந்த ஆண்டு மாணவர்கள் பெற்ற கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளின் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், மாணவர்கள் தங்களுக்குள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.
அந்தக் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவரே நேரில் சென்று அங்கு 2,3,4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களிடம் கல்லூரி குறித்து விசாரிக்க வேண்டும். உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் அங்குள்ள மூத்த மாணவர்களிடம் கேளுங்கள்.
அவ்வாறு ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று குறைந்தபட்சம் 10 கல்லூரிகளையாவது மாணவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், அந்தக் கல்லூரிகளுக்கு அவர்களாகவே முன்னுரிமை வழங்கிப் பட்டியலைத் தயாரிக்கலாம்.
பொறியியல் கலந்தாய்வில் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பார்த்துக ்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அனைத்துக் கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பிவிட்டால், இதே வழிமுறையை மீண்டும் செய்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க தயங்கக்கூடாது.
Thanks
Dinamani
0 comments :