.

பசுமை மாணவர் இயக்கம்

நமது ஊர் தூய்மையான சுவாசத்திற்கு தயாராகி வருகின்றது, அது எப்படி என்பதை அறிவதற்கு முன் சில முன்மொழிதல் இருக்கிறது. அவற்றை கவனிப்போம்.

மனித உயிரினம் பல்கிப் பெருக ஆரம்பித்தபோது, வாழ்வதற்கான ஆதாரத் தேவைகளைப் பெறவும் ஓரிடத்தில் நிலையாக தங்கி வாழவும் சில அடிப்படைகளை இயற்கையிடமிருந்து தகவமைத்துக் கொண்டார்கள். அப்படி உருவானவைதான் விவசாய நிலங்களும், உறைவிடத்திற்கான குடில்களும். ஒரு எடுத்துக்காட்டிற்கு நமது ஊரையே எடுத்துக்கொள்வோமானால், தெருப்பெயரை கவனியுங்கள் கீரைத் தோட்டத்தெரு, சந்தைத் தோப்புத்தெரு, சந்தைக் கிணறு தெரு என்றும் பெரும்பாலான தெருக்களில் கிணறும் இருக்கும். காலப்போக்கில் பல தெருப்பெயர்கள் மாறியிருக்கலாம் பல கிணறுகள் நீரின்றி குப்பையாலும் மண்ணாலும், பெரும்பாலும் குப்பையாலேயே மூடப்பட்டிருக்கும். இன்று சில கிணறுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன, அதுவும் நீரில்லாமல் குப்பைக்கழிவால் நிறைந்து கிடக்கின்றது முடிவு நாளை எண்ணிக்கொண்டு. இவையெல்லாம் ஒரு காலத்தில் தோப்புகளாக இருந்தவைதானே, மக்கள் எண்ணிக்கைப் பெருகப்பெருக தோப்புகள் வீடுகளாக மாறியதையும், பொது இடங்கள் கருவேலங் காடாக மாறியகதையும் நாம் அறிவோம்.

இந்த கிணறுகள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பது போல ஊர் பொது நிலங்களும் கருவேலம்  மற்றும் சீமைக்கருவேலம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த மரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சியும், மழை நீர் நிலத்தை அடையாமலும், பிற தாவரங்களை வளர விடாமலும், நன்னீரையெல்லாம் உப்புநீராக மாற்றிக்கொண்டும் இருந்து வந்தது. இந்த மரம் சுதந்திர இந்தியாவில் விறகிற்காக பயன்படட்டும் என்று இதன் பின்விளைவறியாமல் அரசே முன்னின்று விதைத்தாக தெரிகிறது. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியென்று அறியாமையில் இம்மரங்களை வளரவிட்டிருக்கிறோம்.

 இப்போது இந்த நிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கமுடிகின்றது, சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பொது இடத்தில் சில மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு கூடையாக வேய்ந்த மூங்கில் வேலி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. நண்பர்களிடத்தில் விசாரித்தபோது சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் குழுவொன்று தோன்றி மிக ஆழமாக விதைத்து வருகிறார்கள் என்றறிந்தோம். இவர்கள்தான் தூய்மையான சுவாசத்தை நமக்கு பரிசளிக்கும் முயற்சியில் களம் கண்டிருக்கிறார்கள். முன்னாள் சனாதிபதி அப்துகலாம் அவர்களின் நினைவாக “பசுமை கிராம திட்டம்” என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பதினைந்துபேரைக் கொண்ட இவர்கள் இதுவரையிலும் முன்னூறு பயனளிக்கும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள்.



இந்த செயல்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் கருவேல மரங்கள் எளிதாக அழிந்துவிடக் கூடியவையல்ல. எத்தனை முறை வேரோடு பிடுங்கி எறிந்தாலும் மீண்டும் மீண்டும் தளிர்த்து வளரக்கூடியவை, இவைகளை ஒழிக்க வேண்டுமானால், இம்மாதிரியான சிறு சிறு முயற்சியகள் அதிக பயனளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


பசுமை மாணவர் இயக்கம் முற்றிலும் மாணவர்களால் இயங்கும் குழு என்பதனால் மரம் நட்டு பராமரிக்க இவர்களுக்கு பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்பது நிச்சயம். இவர்களுக்கு ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. 

முதல் கட்டமாக காமராஜர் சாலை (கீழப்பாவூர் மைதானம் முதல் திருநெல்வேலி சாலை வரை) 75 மரகன்றுகள் நட்டனர். 


அடுத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில் 100 மேற்பட்ட மரகன்றுகளையும் 

கீழப்பாவூர் வங்கி பேருந்து நிறுத்தத்திலிருந்து மைதானம் வரையிலும் 60 மரகன்றுகள்  நடுவதற்குரிய மரக்கன்றுகளை வழங்கி மாணவர்கள் உற்சாகத்தோடு களப்பணியாற்ற உதவி செய்து வருகிறார்கள் ஆசிரியர் திரு.சந்தானம் மற்றும் திரு.பரமசிவம் (சுடர் டெக்கரேசன்) அவர்கள்.


மரங்களை நடுவதோடு நிற்காமல் அதனை தொடர்ந்து பாதுகாத்து பேணிவரும் இப்”பசுமை மாணவர்கள் இயக்கம்” கொண்டிருக்கும் பசுமை நம்பிக்கையை தக்கவைக்க நாமும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது. நாளைய சமூகம் நீரில்லாமல் நின்று விழிப்பதை தடுக்கும் இன்றைய இச்சிறு முயற்சி நாளை விருட்சமாக வளரும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு வருகின்றது.



இவர்களுடைய முயற்சியில் பங்கெடுத்து களம் காண விரும்புவோர் அல்லது பண உதவி செய்ய முன்வருவோர்கள் இக்குழுவினரை தொடர்பு கொள்ளலாம். இது நமக்கும் நமது ஊருக்கும் கிடைத்திருக்கும் புதிய நம்பிக்கை இதை வளர்த்தெடுப்பதைத் தவிர நாம் எதுவும் செய்துவிடப் போவதில்லை.


வாருங்கள் வளரும் தலைமுறையோடு கைகோத்து நிற்போம்.


பசுமைப் பாவூரின் வளர்ச்சியில்
பசுமை மாணவர் இயக்கம்

தொடர்பு எண்: 9790083683




Written By 
J.Pandiaraj 
Keelapavoor.com Team

3 comments :

  1. Valthukal arumaiyana muyarchi

    ReplyDelete
  2. இந்த பயணம் தொடரட்டும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிழல் தரும் மரங்களை வைத்து கீழப்பாவூரை பசுமைக் காடாக மாற்றும் முயற்சியில் "பசுமை மாணவர் குழு" மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..

    ReplyDelete