16 கரங்கள் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம் கீழப்பாவூர்
கத்ரு குணங்களைப் போக்கி நிம்மதி தரும் 16 கரநரசிம்மர்!
கீழப்பாவூர் நரசிம்மர் தரிசனம்
பரமசிவன்
கீழப்பாவூர் நரசிம்மர் தரிசனம்
பரமசிவன்
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்ததென்பர். ஏனெனில், தன் பக்தன் பிரகலாதனைக் காக்க ஒரு நொடிப்போதில் தோன்றிய அவதாரம்! நரசிம்மருக்கென்று அமைந்த ஆலயங்கள் இந்தியாவில் பலவுண்டு. அவற்றுள் ஒன்றாகப் பழமையும் பெருமையும் கொண்டு விளங்கும் தலம் கீழப்பாவூர்.
இவ்வூரின் மேற்பகுதியில் அமைந்த குடைவரைக் கோவிலில்தான் பதினாறு கரங்களுடன் அருள்புரிகிறார் நரசிம்மர். குடைவரை அமைப்பைக் கொண்டு பார்க்கும் போது இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோவில் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மற்ற கட்டிட அமைப்புகள் சோழர் கால பாணியில் அமைந்துள்ளன. எனவே இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பது தெரிகிறது.
மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அந்தத் திருக் கோலத்தைக் காண விரும்பினர் காசிபர், வருணன், ககோஷன் உள்ளிட்ட முனிவர்களும் தேவர்களும். அதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். அப்போது, "பொதிகை மலைச்சாரலில் மணிமுத்தாறு தீர்த்தத் திற்கு நாற்பது கல் தொலைவில் உள்ள சிந்தா நதிக்கரையில் தவம் புரியுங்கள்' என்ற அசரீரி வாக்கு கேட்டது.
அதன்படி அவர்கள் சிந்தா நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் புரிய, அதன் பலனாக மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பதினாறு கரங்கள் கொண்டு நரசிம்ம மூர்த்தியாக உக்கிர சொரூபத்துடன் காட்சி தந்தார். அந்தத் திருக் கோலமே கீழப்பாவூர் கோவிலில் அமைக்கப் பட்டுள்ளது.
இவ்வாலயப் பராமரிப்பாளரும் அர்ச்சகரு மான அனந்தய்யங்கார் இத்தல இறைவனின் பெருமை பற்றிக் கூறும்போது,
""ஸ்ரீ மகாவிஷ்ணு ஒருவரே பல அவதாரங்கள் எடுத்து வந்து பல தத்துவார்த் தங்களைப் பூவுலகிற்கு உணர்த்தியிருக்கிறார். கிருத யுகத்தில் நரசிம்மராகவும், திரேதா யுகத்தில் ராமராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ண ராகவும் அவதாரம் செய்த மகாவிஷ்ணு இக்கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக பல்வேறு ஆலயங்களில் கோவில் கொண்டுள்ளார்.
அர்ச்சாவதார மூர்த்தி கள் ஜென்ம சாபல்யம் தருபவை. பாவப்பட்ட மக்கள் கடைத்தேற இவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்குகிறார் பெருமாள்.
இந்த ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.
பொதுவாக ஆகம விதிகளின்படி திருக்குளமானது ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்குள்ள அமைப்பு வேறுவிதமானது. ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த திருக்குளமாதலால், திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.
இந்தத் திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.
பிரதோஷ காலங்களில் திருக்குளத்தில் மூழ்கி யெழுந்து பெருமாளை வழி பட்டால் கடன் தொல்லை, திருமணத் தடை போன்றவை நீங்குவதோடு, வியாபார அபிவிருத்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட நன்மைகளும் உண்டாகும். இது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.
மேலும் இங்கே அலர்மேலு மங்கை சமேத பிரசன்னவேங்கடா சலபதியும் கோவில் கொண்டுள் ளார். "வே' என்றால் பாவம்; "கடம்' என்றால் அழியும் இடம் என்று பொருள். எனவே பாவங்கள் அழியும் இடம் வேங்கடம்; பாவங்களை அழிப்பவன் வேங்கடவன். அத்தகைய வேங்கடவன் இங்கும் கோவில் கொண்டுள்ளதால் இது அனைத்து பாவங் களையும் அழிக்கும் தல மாகிறது. வேங்கடவனின் ஒரு கரம் தன் பாதத்தைக் காட்டிய வண்ணம் இருக்கும். அதாவது, "நீ என் பாதம் பணிந் தால் உன்னை அரவணைத்துக் கொள்வேன்' என்று பொருள். அவன் பாதம் பணிந்தால் கிடைக்காத நன்மைதான் ஏது?'' என்றார் பக்திப் பெருக்கோடு.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வாலயத்தின் பெரும்பகுதி கால மாற்றத்தால் சிதைவடைந்து விட்டது. தற்போது நரசிம்ம பக்த சபையினரின் கட்டுமானப் பொருள் நன்கொடையோடு, பழைய அமைப்பை மாற்றிப் புதிதாய் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் Photos
- nakkhe
0 comments :