.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா

 பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மாசி திருவிழா
பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தெடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் தினமும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பால்குடம், காவடி
நேற்று 10–வது விழா நாள் ஆகும். நாடார் சமுதாய மண்டகபடி சார்பில் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 8 மணிக்கு கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து குறும்பலாப்பேரி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். இதே போல் பாவூர்சத்திரம், பனையடிபட்டி பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
யானை முன்செல்ல இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.
நேற்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது.
புஷ்பாஞ்சலி
மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் மோர் பந்தல், குளிர்பான பந்தல், தண்ணீர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் இணைந்து செய்து இருந்தனர்.

0 comments :