.

மாலைமலரில் வந்த கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கட்டுரை

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் காட்சி கொடுத்த ஷேத்திரத்திலேயே நிரந்தரமாக நரசிம்மர் குடிகொண்டுள்ள சிறப்பு கீழப்பாவூர் தலத்துக்கு மட்டுமே உரித்தானது. ஆகவே கீழப்பாவூர் பூலோக வைகுண்டம் என்பது மிகையன்று. 

தலபுராண ரீதியாக தனித்துவம் பெற்று நரசிம்மர் தலங்களுள் முதன்மையானதாக விளங்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர் ஆலயங்கள் மூன்று உள்ளன. 


ஒன்று ராஜஸ்தானிலும் மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்கர்குடி என்ற இடத்தில் ஒரு சிறு குன்றின் மீதும் உள்ளது. மூன்றாவதாக தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் சமதளப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது. 

நரசிம்மர் கீழப்பாவூரில் நித்யவாசம் செய்பவராக, நிரந்தரமாக அர்ச்சாவதாரத் திருமேனியில் குடிகொண்டு அருள் பாலித்து வருவது பக்தர்களை பரவசடையச் செய்கின்றது. காசியபர், வருணன், சுகோஷன் முதலானோர் நரசிம்மர் தரிசனம் வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டனர். 

மகாவிஷ்ணுவானவர் அசரீரியாக அவர்களிடம் பேசினார். "பொதிகை மலையில், இறவா வரம் பெற்ற ரிஷிகள் நீரோடுவதற்காக தாமிரபணியில் அகத்திய மாமுனிவர் 32 தீர்த்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார். அதில் ஒன்றான மணி முத்தா தீர்த்தத்தில் (தற்போதைய பாபநாசம் பாணதீர்த்தம்) நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவம் இருங்கள். 

நரசிம்மர் தரிசனம் கிட்டும்'' என்பதே அசரீரி வாக்கு. பகவான் கூறியபடி மணி முக்தா தீர்த்தத்தில் புனித நீராடினர் ரிஷிகள். ரிஷிகளின் மெய்யான தவம் மாலைனின் இதயக்கதவை தட்டியது. மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுக்க திருவுளம் கொண்டார். மறுகணமே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 16 திருக்கரங்களுடன் மகா உக்ரமூர்த்தியாக நரசிம்மர் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தார். 

மெய்சிலித்தனர் ரிஷிகள். நரசிம்மர் தரிசனம் தாயார்களின் தரிசனமும் ஒருங்கே கிடைத்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். கண் குளிர, சிந்தை மகிழ வணங்கினர். பின்னர் காட்சியளித்த இடத்திலேயே நிரந்தரமாகக் நரசிம்மர் குடிகொண்டு விட்டார். மீண்டும் வைகுண்டம் செல்லவில்லை. 

மகாவிஷ்ணு மீண்டும் தன்னை நரசிம்மராக வெளிப்படுத்தி அர்ச்சாவாரத் திருமேனியில் நிரந்தரமாக குடி கொண்டுள்ள அந்த புண்ணிஸ்தலம் தான் கீழப்பாவூர். தூய்மையான இடத்தில் மகாலட்சமி வாசம் செய்வாள் என்பது பழமொழி. தாயார் வசிக்கும் அவ்விடத்தில் பயிர்கள் செழித்து வளரும். மகாலட்சுமியின் கருணையினால் கீழ்ப்பாவூரில் பயிர்கள் நன்கு செழித்து வருகின்றன. 

ஊரும் செல்வச் செழிப்புடன் அமைதியாக திகழ்கின்றது. அநேக நரசிம்மர் ஆலயங்கள் காடு அல்லது மலைப்பகுதியில் அமைந்திருக்கும். ஆனால் கீழப்பாவூரில் சமதளமான பூமியில், வயல்கள் தென்னந்தோப்புகள், குளங்கள், கால்வாய் என நீர்நிலைகள் சூழ்ந்த பசுமை நிறைந்த பகுதியில் அமையப்பெற்றுள்ளது. 

இது அமைதியான, தெய்வீகச் சூழலும் தென்றல் தவழும் இயற்கை எழிலும் ஒருங்கேயுள்ள புண்ணியஸ்தலம் ஆகும். இங்கு எளிமையான ஆலயத்தில் இரு சந்நிதிகள் உள்ளது. கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் அலர் மேல் மங்கை, பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். 

இதனையொட்டி பின்புறமாக மேற்கு நோக்கியுள்ள தனி சந்நிதியில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். எவ்வித பயமும் தயக்கமும் சிரமும் இன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை வருடத்தின் 365 நாட்களும் கீழப்பாவூர் நரசிம்மரை நேரில் வந்து மிக அருகில் நின்று தரிசிக்கலாம். ஒரே ஆலயத்தில் வெங்கடாசலபதி, நரசிம்மரை தரிசிக்க அருமையான தலம் இதுவாகும். 

வேளாண்மைப் பகுதியிலுள்ள கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேரத்தில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் ஒலித்துள்ளது. 

நரசிம்மர் கோபமாக இருப்பதாக எண்ணிய பக்தர்கள் பால், இளநீர் அபிஷேகம் செய்யத் தொடங்கியதும் சிம்ம கர்ஜனை நின்றுவிட்டது. மேலும் நரசிம்மரை சாந்தப்படுத்தவதற்காகவே அவரது சன்னதி முன்பாக மாபெரும் தெப்பக்குளம் ஏற்படுத்தியுள்ளனர். 

பரிகாரத்தலம்: 

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக் கார்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. 

வழிபட உகந்த நாட்கள்: 

நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. 

நடை திறப்பு: 

காலை 8.00-11.30, மாலை 5.00-800 

அர்ச்சகர்: இரா.ஆனந்தன் 9442330643. 

இருப்பிடம்: 

திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது. 

- கி.ஸ்ரீமுருகன், கீழப்பாவூர்.

0 comments :