தமிழக அரசின் புதிய திட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வினியோகம்
தமிழக அரசின் புதிய திட்டத்தில் இளைஞர் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
“முதல் தலைமுறை“ இளைஞர்கள்
பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்த “முதல் தலைமுறை“ இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சம் ரூ.25 லட்சம் வரை) தமிழக அரசு மானியத்துடன் திட்ட மதிப்பீடு ரூ.1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் “நீட்ஸ்“ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
21 முதல் 35 வயது வரை (பெண்கள், ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45) இந்த திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
வியாபாரம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவை தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கடன் பெற தகுதி இல்லை. மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.
நேர்காணல்
அந்த மனுக்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில், முன்னோடி வங்கி மேலாளர், நெல்ட்சியா அமைப்பின் பிரதிநிதி, தாட்கோ மேலாளர், டி.ஜ.ஜ.சி. கிளை மேலாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவால் நேர்காணல் நடத்தப்படும். தகுதியான மனுக்கள் வங்கி கடனுக்கு பரிந்துரை செய்யப்படும். 50 சதவீதம் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வங்கிகளில் இருந்து கடன் அனுமதி கடிதம் கிடைத்த பின்னர், சென்னை தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் வழியாக ஒரு மாதம் கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் செலுத்தி வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிதியுதவி பெறும்போது, மாவட்ட தொழில் மையம் அவருக்கு தகுதி வாய்ந்த 25 சதவீத மானிய தொகையை அரசு விதிகளின் படி வங்கிக்கு விடுவிப்பு செய்கிறது.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் தொழில் முனைவோருக்கு சிட்கோ, சிப்காட் போன்ற அரசு தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடுக்கான முன்னுரிமை வழங்கப்படுகிறது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீதம் மானியத்துடன் கீழ்காணும் மானியங்களும் வழங்கப்படும்.
மானியம்
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் உற்பத்தி தொடங்கி முதல் 6 ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்திய வாட் வரி முழுவதும் மானியமான வழங்கப்படுகிறது. குறைந்த அழுந்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு, மின் கட்டணத்தில் 20 சதவீதம் குறைந்த அழுத்த மின் மானியம் வழங்கப்படுகிறது. மின்னாக்கி மானியம், முறையாக கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு வட்டி தொகையில் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பொது மேலாளர், நெல்லை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி இலவசமாக விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 0462-2572384, 2572162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
News In: Daily Thanthi
News In: Daily Thanthi
0 comments :