.

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - நூல் - 1

திருக்குறளையும் பாரதியின் எழுத்துக்களையும், யாரெழுதியது என்ற நினைப்பேயில்லாமல் மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பல புலமைகளை பற்றிய அறிமுகம் பள்ளியிலேயே கிடைத்ததும், சிலவற்றை மனப்பாடம் செய்திருப்போம். அந்த எழுத்துக்கள் எங்கேனும் மூளையின் நரம்பிடுக்குகளில் தூசிபடிந்து கிடந்தால் அதை சீர்படுத்த உதவும் எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்து பின் பழையன நோக்கிப் புகுதல் நலம் பயக்கும் எனக் கருதுகிறேன்.

வைரமுத்து அவர்களை தமிழகத்தில் அறியாதவர்கள் இருந்தால் அது குறிப்பிட்ட வயதுக்கு கீழுள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய தெளிவான பிரக்ஞை இல்லாத சிறுவர்களாகத்தான் இருக்கும் மற்ற ஏனையரும் இவரை அறிவர். திரையுலகில் மட்டுமில்லாமல் இலக்கிய தளத்திலும் தனது தமிழ்த் திறனை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதை இவரது கிராமத்து நாவல் படைப்பு ஒன்று பெற்றிருக்கிறது. அதைப்பற்றி வரும் வாரங்களில் ஒருநாள் பேசலாம்.

இளைஞர்களின் நிலைகண்டு வருந்தி, அவர்களை தன் நண்பர்களாக பாவித்து சில கட்டுரைகளை “சிற்பியே உன்னை செதுக்குகிறேன்” என்ற சிறு நூலில் எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைகள் வெறும் அறிவுரை என்ற தளத்தில் நின்று கொள்ளாமல் நம்மோடு உரையாடுகிறது. பொழுதுபோக்கு என்ற சொல்லையே தமிழிலிருந்து அழித்தொழிக்க வேண்டுமென்றும், பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு என்று இயல்பான ஒரு தந்தைக்குறிய அல்லது நண்பனுக்குறிய நேசத்துடன் எடுத்துரைக்கிறது. திரைப்பாடல் எழுதுவது மக்களின் பொழுதுபோக்கிற்குத்தானே அதை முதலில் ஒழிக்கவேண்டாமா எனக் கேட்டால் நீங்கள் ஆக்கத்திற்கான தேடலுக்கு தயாராகிவிட்டீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்.

வாசிப்பு என்பது திரைப்படம் பார்த்துவிட்டு பிடித்திருக்கு பிடிக்கவில்லை என்ற நோக்கோடு விலகிச்செல்வது அல்ல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகம் அல்லது அறிவார்ந்த தேடலுக்கு விதையாக இருப்பது. இந்த புத்தகமும் வாசிக்கும் நம்மிடம் சில லட்சியக் கேள்விகளை எழுப்பும், பொழுதாக்கங்களுக்கான தேடல்களுக்கு இட்டுச் செல்லும், நம்மைப் பற்றிய தேடல்களை துரிதப்படுத்தும்.
இந்த கட்டுரைத்தொகுப்பின் இறுதியில் இவர் தன் மகனுக்கு எழுதிய சில கடிதங்களை இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஓய்வு என்ற கட்டுரையின் பக்கங்களை இணைத்டிருக்கிறேன் வாசித்துப் பாருங்கள். வரும் வாரத்தில் சிறப்பானதொரு கதை புத்தகத்தை அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். வாசிப்பவர்கள் தாங்கள் வாசித்த, வாசிக்கும் புத்தகத்தை பற்றி பின்னோட்டத்தில் எழுதலாம் விவாதிக்கலாம்.

அன்புடன்
ஜெ பாண்டியன்



0 comments :