கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தல வரலாறு
கீழப்பாவூரில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் பெரியாண்டவர் பெரியசாமி. விஷ்ணுவின் அம்சமாக இங்கு பெரியாண்டவர் காட்சி தருகிறார். ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பெரியாண்டவர் கோவிலை ஆலிக்கோவில் என்றும் யானைக்காரன் கோவில் எனவும் அழைக்கிறார்கள். ஆதியில் இந்த கோவில் தோன்றியதால் இந்த கோவில் ஆதி கோவிலாகி பின்னர் ஆலி கோவில் என மருவியிருக்கலாம் என கருதப்படுகிறது. யானைக்கும் பிரதான பூஜை இங்கு நடப்பதால் யானைக்காரன் கோவில் என்கின்றனர். ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் படி அளக்க சென்றிருந்தபோது அங்கு வந்த திருமால் சிவன் ஆசனத்தில் அமர்ந்தாராம். அப்போது அங்கு வந்த சிவபெருமான், தனது இருக்கையில் இருந்த திருமாலை பார்த்து, ஆராய்ந்து பாராமல் அபயம் என வருவோருக்கு வரம் கொடுப்பவன் நான். ஆனால் அவற்றை ஆய்ந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளை களைந்து பக்தர்களை காப்பவர் நீர். எனவே நீதான் பெரிய ஆண்டவர் என அருளாசி வழங்கினார்.
அன்று முதல் திருமாலுக்கு பெரியான்டவர் என்ற பெயரும் வழங்கலாயிற்று. கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. இங்கு வீற்றிருக்கும் பெரியாண்டவர் சிறந்த போர் வீரர். நீயாயம், தர்மம் நீதிகாக்க பாடுபட்டவர். கேரளமன்னன் ஆட்சியில் யானைப்படையின் தளபதியாக இருந்தவர் பெரியாண்டவர் என்கிறார்கள் இப்பகுதி பெரியவர்கள். விஷ்ணுவின் அவதாரமாகவே இவர் கருதப்படுகிறார்.
ஒரு காலத்தில் கேரளாவில் பெண்களுக்கும், சான்றோர்களுக்கும் எதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டபோது பல அங்கிருந்து இடம்பெயர்ந்து கடலோரமாக திருச்செந்தூர், உடன்குடி, குரும்பூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் பெரியாண்டவரும் அவரது யானைப்படையுடன் சான்றோர்களுடன் வந்தாராம். குரும்பூர் பகுதியில் இருந்து சிவகாமி என்ற பெண் தனது கணவர் மற்றும் பலருடன் இடம்பெயர்ந்து இன்றைய கீழப்பாவூர் பகுதிக்கு வந்தனர். அப்போது இந்த பகுதி காடாக காட்சி அளித்தது. சிவகாமி அம்மையாருக்கு 5 மகன்கள். அவர்களுக்கு சிவகாமி அம்மாள் பல்வேறு கலைகளையும் கற்று கொடுத்ததோடு, அங்கு கிடந்த இடங்களை திருத்தி நெல் விளைவிக்க செய்தார்.
காட்டுப்பகுதியில் சிவகாமி அம்மாள் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தபோது அவருடன் பெரியாண்டவரும் தனது பரிவார தேவதைகளுடன் இங்கு வந்ததுள்ளார். சிவகாமியிடம் தான் இங்கு தங்கப்போவதாகவும், தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் உணவளிக்குமாறும் கேட்டார். அங்கு நின்ற தெய்வங்களை கண்ட சிவகாமி அம்மாள் "இவர்கள் எல்லாம் அசைவம் சாப்பிடுவர்களை போல இருக்கிறீர்கள். என்னால் உங்களுக்கு அசைவம் தர இயலாதே" என்றார். அதற்கு பெரியாண்டவரும் அவருடன் வந்த தெய்வங்களும் "நீங்கள் அன்பாக தரும் உணவை உண்டு உங்களுடனே இருக்கிறோம்" என்று அங்கு நிலையம் கொண்டனர். அந்த இடம்தான் தற்போது பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ள பகுதி. இங்கு பெரியாண்டவர் பெரியசாமியாக விஸ்வரூப கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
விழா காலங்களில் இவருக்கு மாலைகள் மலைபோல் வந்து குவிவது ஆச்சரியமானது. மலர் மாலைகளுடன் பழ மாலை, பண மாலையும் இவருக்கு பக்தர்கள் அணிவிக்கிறார்கள். இங்கு அனைத்து தரப்பினருமே வந்து பெரியசாமியை வணங்கி வருகிறார்கள். பெரியசாமியின் வலது பக்கம் ராமர், ஆஞ்சநேயர் இடதுபுறம் சிவனணைந்தபெருமாள், பார்வதி, லட்சுமி தேவி ஆகிய தெய்வங்கள் உள்ளன. பெரியாண்டவரின் இடப்புறமாக அழகிய யானை காட்சியளிக்கிறது. இதை அடுத்ததாக சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பெரியாண்டவர் போல சங்கிலி பூதத்தாரும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறார். எதிரே சாஸ்தா பூரண புஷ்கலையுடன் காட்சி தருகிறார். சைவ, வைணவ வழிபாட்டுக்கு ஒற்றுமைக்கு இலக்கணமாக இங்கு சிவ வழிபாடும், பெருமாள் வழிபாடும் கலந்தே நடைபெறுகிறது. விழா காலங்களில் நாட்கள் கோவில் சார்ந்த யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை. கடுமையான விரதம் மேற்கொண்டு பெரியாண்டவரை வணங்குகிறார்கள்.இந்த கோவிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடக்கின்றன. பெரியாண்டவர் முன்பு தேங்காய் உடைத்தே எல்லா சன்னதிகளுக்கும் கொண்டு சென்று படைக்கப்படுகிறது.
===================================
சிவகாமி மைந்தர்கள்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கீழப்பாவூர் பகுதி காடாக இருந்தது. பின்னர் சிவகாமியின் மகன்களின் குடும்பங்கள் பல்கி பெருகி ஊர் வளர்ந்தது. ஊரில் இருந்து வெளியிடங்களுக்கு பலர் இடம்பெயர்ந்து அங்கும் பெரியாண்டவர் புகழை பரப்ப தொடங்கினர். இன்று 86 கிராமங்களில் இந்த கோவிலை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கோவில் விழாவின்போது கீழப்பாவூரில் கூடுவது சிறப்பு. இந்த கோவிலை சார்ந்தவர்கள் கீழப்பாவூரில் ஆதியில் குடியிருந்த மக்கள் என்பதால் இவர்களை நாட்டாமை வகையறா என்றும் அழைக்கிறார்கள். பெரியாண்டவர் கோவில் கொண்டு அருளாட்சி புரிய காரணமாக இருந்த சிவகாமி அம்மையாருக்கும் இந்த கோவிலில் வழிபாடு நடக்கிறது. இவரது சன்னதி பெரியாண்டவரின் நேரே பின்புறம் அமைந்து உள்ளது.
=========================================
வளரும் யானை
கீழப்பாவூர் பெரியாண்டவர் சன்னதியில் உள்ள யானை தொடக்கத்தில் கோவில் உருவானபோது சிவகாமி அம்மாளின் வெற்றிலை பெட்டியில் இருந்து மிக சிறிய அளவில் இருந்ததாம். கோவிலில் பெரியாண்டவர் அமர்ந்ததும் அந்த இடத்தில் சிவகாமி அம்மாள் அந்த சிறிய யானையை எடுத்து தரையில் வைத்தார். அதன்பிறகு அந்த எடுக்க முடியவில்லை. யானை நாளுக்குநாள் வளர தொடங்கியது. இன்று வரை யானை வளர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது 5 அடி உயரத்தில் இருக்கும் இந்த யானை பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை ஐராவதமாக அள்ளி தருகிறது. பெரியாண்டவர் சன்னதி முன்பு நின்று வேண்டப்படும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. யானைப்படையை பெர்யாண்டவர் வழிநடத்தி சென்றதால் வரது சன்னதியில் இந்த யானை பிரதானமாக உள்ளது.
======================================
குறுமறை நாடு
கி.பி. 530 ஆண்டுகளுக்கு முன் தென்காசியைத் தலை நகராக கொண்டு அரசாண்ட பராக்கிரம பாண்டியன், தென்காசியில் காசி விசுவநாதர் உலகம்மன் ஆலயம் எழுப்பிய வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பாவூரில் மக்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. கீழப்பாவூரை சுற்றிய கீழப்பாவூர், மேலப்பாவூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இவ்வூர்கள் அடங்கிய பகுதி குறுமறை நாடு என அழைக்கப்பட்டது. அந்த காலத்திலேயே பெரியாண்டவர் கோவில் உருவாகியிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
=============================
பெரியாண்டவருக்கு மரியாதை
பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை நோன்பு போட்டு 2 வது வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். பெரியாண்டவர் விழா முடிந்த பின்னரே கீழப்பாவூரில் சுப நிக்ழச்சிகள் நடக்கிறது. முதன்மை தெய்வமான பெரியசாமிக்கு அப்பகுதி மக்கள் முதல் மரியாதை அளிக்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று.
===============================
பெரியாண்டவர் அற்புதம்...
இந்த ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களில் ஒரு குடும்பம் சிங்கப்பூரில் குடியேறினர். ஒருமுறை அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மரணத்தின் விளிம்புக்கே சென்ற அவருக்கு பெரியாண்டவர் காட்சி அளித்தார். யானை அவரது கனவில் சென்று தண்ணீரை பீய்ச்சியது. உடனே அந்த நபர் குணமானார். ஆனால் அவருக்கு பெரியாண்டவர் பற்றி எதுவும் தெரியாது. ஒருமுறை அவரது கனவில் தோன்றிய இறைவன் கீழப்பாவூரில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை கனவிலேயே காட்டி வர செய்தார். அன்றில் இருந்து கீழப்பாவூருக்கு அவர் வந்து சுவாமியை வணங்கி செல்வதோடு அன்னதர்மம் மற்றும் கோவில் வளர்ச்சிக்கு நிதி வழங்கி வருகின்றனர். இன்றும் விழா ஆரம்பித்ததும் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்பி வ்டுகிறார்கள்.


வரலாறு சிறப்பு மிக்க உண்மை தகவலை பகிர்ந்தன்மைக்கு நன்றி
ReplyDeleteவரலாறு சிறப்பு மிக்க உண்மை தகவலை பகிர்ந்தன்மைக்கு நன்றி
ReplyDeleteGOOD PUBLISH
ReplyDeleteThanks for all such information which is very much essential for the younger generation to know more about our family deity.
ReplyDelete